சுத்த நிபாதம் 5.5

மேத்தகு—மாணவ—பூச்சா சூத்திரம்: மேத்தகரின் கேள்விகள்

போற்றுதற்குரிய மேத்தகர்:
“நான் அண்ணலிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். அவர் எனக்குப் பதில் கூறட்டும். அவர் அறிஞர், முழுமையானர் என்பதை நான் அறிவேன். உலகில் இத்தனை துக்கங்கள் எங்கிருந்து தோன்றின?”

அண்ணல்:
“துக்கத்தின் காரணத்தைக் கேட்டுள்ளாய், மேத்தகு. அதனை நான் உய்த்துணர்ந்ததால் உனக்கு விளக்குகிறேன். உலக விஷயங்களின் மீது உள்ள பற்றின் காரணமாகவே பல துக்கங்கள் நிகழ்கின்றன. அறியாமையால் பற்றைத் தோற்றுவிக்கும் முட்டாள், திரும்பத் திரும்பத் துக்கம் அனுபவிக்கின்றான். எனவே விவேகம் உள்ளவர் பற்றை உண்டாக்கக் கூடாது. அதுவே துக்கத்தின் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேத்தகர்:
“கேட்டதை விளக்கியுள்ளீர் அண்ணலே. நான் மேலும் ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்கு விடை கூறுங்கள்: சான்றோர் எப்படி வெள்ளத்தை, பிறப்பு, மூப்பு, துக்கம், துயரம் ஆகியவற்றைத் தாண்டுகின்றனர்? விளக்கிக் கூறுங்கள் அண்ணலே, ஏனென்றால் இந்தத் தம்மம் உங்களால் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. ”

அண்ணல்:
“தம்மத்தை விளக்குகிறேன், மேத்தகு. இந்தப் போதனையை நேரடியாக உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று அதைக் கேட்டால் மட்டும் போதாது. அதை அனுபவித்து, கடைப்பிடியுடன் வாழ்ந்தால் தான் உலகச் சிக்கல்களுக்கு அப்பால் போக முடியும்.”

மேத்தகர்:
“மேன்மையான தம்மத்தை அனுபவித்து, கடைப்பிடியுடன் வாழ்ந்து உலகச் சிக்கல்களுக்கு அப்பால் போக முடியும் என்பதை நினைக்கும் போது கூதுகலப்படுகிறேன், அண்ணலே!”

அண்ணல்:
“மேத்தகு, நீ எதைத் தெளிவாக அறிந்து கொண்டாலும், மேல், கீழ், எதிரில் அல்லது நடுவில், அதனால் பெரும் மகிழ்ச்சியடைவதைக் கைவிடு. பழக்க தோஷங்களை , (உலக வாழ்க்கையை உறுதி செய்யும்) உணர்வுகளை விட்டு விடு. . உளதாதலைத் தொடராதே. இவ்வாறு வாழ்ந்து, கடைப்பிடியுடன், விழிப்புடன், சுயநலப் பற்றுகளை விட்டு விட்ட பிக்கு, விவேகத்துடன் உள்ளப் பூர்வமாக அறிந்தவர். இந்த வாழ்க்கையிலேயே பிறப்பு, மூப்பு, துக்கம், துயரம் ஆகியவற்றை அவரால் உதறிவிட முடியும்.”

மேத்தகர்:
“சிறந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்கிறேன். பற்றில்லாமல் இருப்பதை நன்கு விளக்கியுள்ளீர் கோதமரே. இந்தத் தம்மத்தை அவர் அறிந்ததால் அண்ணல் கண்டிப்பாகத் துக்கத்தை நீக்கியவர். உங்கள் புத்திமதிகளைக் கேட்பவர் கண்டிப்பாகத் துக்கத்தை இறக்கி விடுவார். முனிவரே, மேன்மையானவரே, புரிந்து கொண்ட நான் உங்களை வணங்குகிறேன். அண்ணல் தொடர்ந்து எனக்குப் புத்திமதிகள் கூறுவாராக.”

அண்ணல்:
“உண்மையான பிராமணன் என்பவர், அறிஞர், எதற்கும் சொந்தக்காரர் இல்லை. புலன் இன்பத் தோற்றத்திற்குப் பற்றில்லாதவர், அவர் கண்டிப்பாக வெள்ளத்தைத் தாண்டி விட்டவர். வெள்ளத்தைத் தாண்டிய அவர் மாசற்றவர். சந்தேகங்கள் இல்லாதவர். இந்தத் தொடர் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் பற்றினை உதறி விட்டவர். மேன்மையான அறிவை எட்டியுள்ளவர். வேட்கை இல்லாமல், சஞ்சலம் இல்லாமல், அவா இல்லாமல், அவர் பிறப்புக்கும், மூப்புக்கும் அப்பால் சென்றவர், என்கிறேன்.”