சுத்த நிபாதம் 5.6

தோதக-மாணவ-பூச்சா சூத்திரம்: தோதகரின் கேள்விகள்

தோதகர்:
பகவரைக் கேட்கிறேன்.
தயவுகூர்ந்து பதில் கூறவும்.
உங்கள் வார்த்தைகளைக் கேட்கக் காத்திருக்கிறேன், முனிவரே.
நீங்கள் சொல்வதைக் கேட்ட பின்,
எனது விடுதலைக்காக நான் பயிற்சி செய்வேன்.

புத்தர்:
அப்படியானால்
ஆர்வத்துடன்—
நுண்ணறிவோடும், கடைப்பிடியோடும் இருந்து,
பின் நான் சொல்வதைக் கேட்டு விட்டு
உனது விடுதலைக்காகப் பயிற்சி செய்யவும்.

தோதகர்:
தேவரும், மனிதரும் வாழும்
இந்த உலகில் நான்
எதற்கும் சொந்தம் கொண்டாடாத
ஒரு பிராமணனைப் பார்க்கிறேன்.
எல்லாம் தெரிந்த அறிவாற்றலுள்ளவர்.
எனது சந்தேகங்களிடமிருந்து விடுவிக்கவும், ஓ சாக்கியரே!

புத்தர்:
இந்த உலகில் எவரையும்
சந்தேகங்களிலிருந்து என்னால்
விடுவிக்க முடியாது, தோதக.
ஆனால் மிகச் சிறந்த தம்மத்தைத் தெரிந்து கொண்ட பின்
நீரே வெள்ளத்தைக் கடந்து விடலாம்.

தோதகர்:
தனிமை பற்றிய தம்மத்தை
(பற்றில்லாத நிலை பற்றி)
நான் தெரிந்து கொள்வதற்காகக்
கருணையுடன் போதனை செய்யவும்,
ஓ பிராமணரே,
.
அதனால் பரந்த ஆகாசம் போல
அங்கலாய்ப்பு இல்லாமல்,
இங்கேயே
சுதந்திரமாக,
அமைதியாக
வாழ்வேன்.

புத்தர்:
நான் இங்கேயே இப்போதே கிடைக்கும்
அமைதி பற்றிப்
—மற்றவரிடம் கேள்விப்பட்ட வார்த்தைகளை அல்ல—
போதிக்கிறேன். அதனை அறிந்து
கடைப்பிடியுடன் வாழ்ந்து,
உலகச் சிக்கல்களுக்கு அப்பால்
உன்னால் போக முடியும்.

தோதகர்:
அந்த மேன்மையான அமைதியை
நான் விரும்புகிறேன், மாமுனியே.
அதனை அறிந்து
கடைப்பிடியுடன் வாழ்ந்து,
உலகச்சிக்கல்களுக்கு அப்பால்
நான் போவேன்.

புத்தர்:
நீ அக்கறைகாட்டும் எந்த விஷயமானாலும்
மேல், கீழ், எதிர்ப்புறத்தில், நடுவில்:
அதனை உலகில் உள்ள கட்டென்று தெரிந்து கொள்,
வேட்கை உண்டாக்க வேண்டாம்
—ஆவதற்கும், ஆகாமல் இருப்பதற்கும்.