சுத்த நிபாதம் 5.7

உபாசிவ-மாணவ-பூச்சா: உபாசிவரின் கேள்விகள்

உபாசிவர்:
தனிமையில், சாக்கியரே,
எதனையும் நம்பி இராமல்,
என்னால் பெரும் வெள்ளத்தைத்
தாண்டிச் செல்ல முடியாது.
கூறுங்கள், எல்லாம் அறிந்த அறிவாற்றலுள்ளவரே
(எல்லாக் கோணங்களிலிருந்தும் அனைத்தையும் பார்ப்பவரே),
நம்பிக்கையுடன்
எதன் ஆதரவோடு வெள்ளத்தைக் கடப்பது?

புத்தர்:
மனத்தை இன்மையில் கவனம் செலுத்தி,
எதையும் நம்பியிராமல்,
புலன் இன்பங்களைக் கைவிட்டு,
பேச்சைத் தவிர்த்து,
வேட்கையின் முடிவை
இரவும் பகலுமாகக் கவனித்து
வெள்ளத்தைக் கடந்து செல்.

உபாசிவர்:
புலன் இன்பங்களிடமிருந்து விடுபட்டவர்,
இன்மையைச் சார்ந்திருந்து,
மற்றதை எல்லாம் விட்டு விட்டு,
மனக்குறிப்புகளிடமிருந்து விடுபடுகிறார்:
ஆனால் அப்படி விடுபட்டவராகத் தொடர்ந்து இருப்பாரா?
(அல்லது மீண்டும் மனக்குறிப்புகளில் சிக்கிக் கொள்வாரா?)

புத்தர்:
புலன் இன்பங்களுக்கான அவாவிடமிருந்து
விடுபட்டவர்
இன்மையைச் சார்ந்திருந்து,
மற்றதை எல்லாம் விட்டு விட்டு,
மனக்குறிப்புகளிடமிருந்து விடுபடுகிறார்:
அப்படி விடுபட்டவராக அவர் தொடர்ந்து இருப்பார்.

உபாசிவர்:
எல்லாம் அறிந்த அறிவாற்றலுள்ளவரே,
(மனக்குறிப்புகளிடமிருந்து விடுபட்டாராக) பல ஆண்டுகள் பாதிக்கப்படாமல் அங்கேயே இருந்தால்
அவர் குளுமை பெற்று (காமம், வெறுப்பு, மயக்கம் என்ற தீயை அணைத்தவராக)
விடுதலை பெறுவாரா?
அவர் உணர்வு அப்படி இருக்குமா?

புத்தர்:
சுழன்றடிக்கும் காற்றால்,
எரியும் தீ அணையும் போது
அணைந்த தீ எங்கு போயிற்று
என்பதைக் கூற முடியாது,
அது போல, மனக்குறிப்புகள் இல்லாத முனிவர்
நிப்பாண நிலையை அடைகிறார்.
அந்த நிலையை விரித்துக் கூற முடியாது
(அவரைப் பற்றி வேறு எதையும் தெரிந்து கொள்ள முடியாது).

உபாசிவர்:
முடிவை எட்டிய ஒருவர்:
அவர் மறைந்துவிட்டாரா,
அல்லது தோன்றுவதில்லையா,
அல்லது என்றென்றும்
துன்பத்திலிருந்து விடுபட்டவராக இருக்கின்றாரா?
முனிவரே தயவுகூர்ந்து எனக்குத் தெரிவியுங்கள்
ஏனென்றால் இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

புத்தர்:
முடிவை எட்டியவரை எவராலும்,
எப்படியும் நிர்ணயிக்க, அளவிட
முடியாது. அவரை வர்ணிக்கும் வார்த்தைகளும் இல்லை.
அவர் தோன்றுவதில்லை என்றும் கூறமுடியாது.
அனைத்தையும் துறந்தவரைப்
(நிப்பாண நிலையை அடைந்தவரை)
பற்றிப் பேசும் வழிகளும் ஏதும் இல்லை.