சுத்த நிபாதம் 5.9

ஹேமக-மாணவ-பூச்சா: ஹேமகரின் கேள்வி

ஹேமகர்:
கடந்த காலத்தில்,
கோதமரின் போதனைகளைக் கேட்பதற்கு முன்னர்,
யாராவது ‘அப்படித்தான் நடந்தது’, ‘இப்படித்தான் நடக்கும்’ என்று விவரிக்கும் போது
அது மற்றவர் சொன்ன வதந்தியாக,
அவ்வார்த்தைகளுக்குச் செவி கொடுப்பதோடு சரி என்றவாறு இருந்தது.
அவற்றைக் கேட்டபின் பல அனுமானங்கள் தோன்றின,
ஆனால் அது எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை.
இப்போது முனிவரே, எனக்கு
வேட்கையை அழிக்கும் தம்மத்தைப் போதியுங்கள்.
அதை அறிந்து, கடைப்பிடியோடு வாழ்பவர்,
உலகச் சிக்கல்களைத்
தாண்டிச் செல்ல முடியும்.

புத்தர்:
இங்கு ஹேமக,
நாம் விரும்பும் விஷயங்களைப் பொருத்தவரை
—கண்டது, கேட்டது, உணர்ந்தது, அறிந்தது ஆகியவற்றைப் பொருத்தவரை:
விருப்பமும், பேராசையும் இல்லாத,
இறப்பில்லாக் கட்டவிழ்ந்த நிலை உள்ளது.
இதை அறிந்தவர், கடைப்பிடியோடு வாழ்ந்து
இங்கேயே, இப்போதே
முழுமையாகக் கட்டவிழ்த்தவர்களாக
என்றென்றும் அமைதியடைந்தவர்களாக
உலகச் சிக்கல்களைத் தாண்டி அப்பால் சென்று விட்டனர்.